You Are Here: Home » Articles » தொண்டைமானாறு–அக்கரை-உப்புமால்

தொண்டைமானாறு–அக்கரை-உப்புமால்

தொண்டைமானாறு–அக்கரை-உப்புமால்

(தென்னைமரத் தோப்பு நிறைந்த அழகான இடம்)

 

villagename map - Copy

 

எமது ஊரின் மேற்குப்புறத்தில் ஆழ்கடலின் ஓரமாய் அமைந்துள்ள இந்த இடம் எம் ஊரவர் பலராலேயே பெரிதும் அறியப்படாததொன்றாகும். ஆனால் இன்று வல்லாதிக்க ஆக்கிரமிப்பால் எமக்கு விலக்கப்பட்டிருக்கும் நிலம் பெரும்பாலும் இப்பவும் எம்மூரவருக்கு சொந்தமானது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இன்னுமோர் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இது ஒரு சரித்திரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இடம்பிடித்து இன்றும் யாழ் குடாநாட்டின் இயற்கை சூழல் சமநிலையை (Ecological Balance) பேண மூல காரணமாய் இருக்கிறது என்பதுதான். இப்படியான ஒரு பொக்கிசத்தைப்பற்றி நீங்கள் அறிந்துகொள் ஏதுவாக பல விடயங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.நீங்களும் உங்கள் பங்கை செய்யலாமே.

 

இதன் முதலாவது பகுதியாக திரு. இ. சிறீதரன் அவர்களின் குறிப்புகளை தருகிறோம். இதில் அவரின் கைபட வரைபில் அக்கரை- உப்புமால்- புதுச்சந்நிதி அடங்கலான பகுதியில் இருக்கும் அடையாளங்களையும் அவை பற்றிய விபரங்களையும் காணலாம். மேலும் வரலாற்றுக்குறிப்புகளில் அவர் திரட்டியவற்றையும் இங்கே காணலாம

 

 

uppumal

 

 

01. இடைக்காட்டு கண்ணகைஅம்மன் கோவில்

02. புதுச்சந்நிதிகோவில். இது 1915 ஆண்டளவில் ஒர் அயலூரவரால் தொடங்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளில் மூடப்பட்டது.  புதுச் சந்நதி இருப்பது வீரகத்தி செல்லையாவின் (தொண்டைமானாற்றைச் சேர்ந்த) தென்னந் தோப்பில். 03. தொண்டைமானாறு செல்லச் சந்நதி கோவில்.

04. தொண்டைமானாறு கோணேஸ்வரர் கோவில்.

05. வடமராட்சி கூட்டுறவு போக்குவரவு சேவைச்சங்கத்தின் பஸ்கள் தரிப்பிடம். இப்பேருந்துகள் பருத்தித்துறை முதல் சாவகச்சேரி வரையும் தொண்டைமானாறு முதல் சுண்ணாகம் மானிப்பாய் ஊடாக மூளாய் பொன்னாலை வரையில் போய்வந்தது.

06. உப்புமால், நாவல் மரங்களும் சவுக்கு மரங்களும் நிறைய இருந்தன எல்லைகள் முட்கம்பியால் அடைக்கப்பட்டிருந்தன. உப்பு நீண்ட குவியலாக பனை ஓலையால் வேயப்பட்டு இருக்கும். இவ்வுப்புமாலின் களஞ்சியப் பொறுப்பாளர் வீடும் கந்தோரும் இங்கே இருந்தன. அங்கிருந்த கிணறு நல்ல தண்ணீராக இருந்தது. அக்கரை வாசிகள் இங்கேவந்து குடிநீர் எடுப்பார்கள்.

07. ஞானப்பாரமாக கப்பல்களில் கொண்டுவரப்பட்ட கருங்கல் குவியல்.

08. வழிப்போக்கர்கள் கை கால் அலம்புவதற்கும் ஆடு மாடுகள் அருந்துவதற்குமாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியும,; கிணறும் இருப்பது வீரகத்தி தம்பிமுத்துவின்; தென்னந்தோப்பில்.

09. மான் பாய்ந்த வெளியை ஊடறுத்துச் செல்லும் பாதை. இப்பாதை பொன்னாலை வரை செல்கின்றது கீரிமலை ஊடாக.  திரு. கே. எஸ். பாலச்சந்திரனின் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ கதையில் வரும் இடம் இதுதான்.

10. அணைக்கட்டு, இது 1948ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதனால் 1949ம் ஆண்டு உப்புமாலும் கரணவாய் வெள்ளப்பரவை உப்பளங்களும் மூடப்பட்டன. ஆனையிறவு உப்பளத்தின் சுப்பரின்டென்டன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு. கனகநாயகம் இந்த உப்பளங்களுக்கு பொறுப்பாயிருந்தார்.

11. புதிய பாலம்.

12. பழைய பாலம் பனைமரங்களை நாட்டி அதன் மேல் பாலைமரத் தீராந்திகள் போட்டுக் கட்டப்பட்ட பாலம். பார்க்க மிகவும் அழகாக இருக்கும். இப்பாலம் 1829 க்கும்1867க்கு மிடையில் அரச அதிபர் டைக் துரையால் கட்டப்பட்டது 1910 வரையிலும் இதாற் போவோர் ‘ஆயக்கட்டணம்’ செலுத்தினார்கள். 1954ல் புதுப்பாலம் கட்டியதால் மூடப்பட்டது.

13. வல்வை சிவன்கோவில் காணி. இது கோவில் தர்மகர்த்தாவாகிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களால் குடியேற்றத்திற்காக அன்பளிப்பு செய்யப்பட்டது.

14. ’செல்லையா வான்’ இது ஒரு முக்கிய கடற்றொழில் இடமாகும்

15. ’சேதுபதியார் கண்டு.’  இதுவும் ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற இடம்.

Marakkanam_Salt_Pans

 

 

 

 

இலங்கைத்தீவின் (ஈழம்) தொல் சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் பின்வரும் வரலாறுகள் தோன்றுகின்றன. இக் குறிப்புகளின் இடையிடையேயும் தொண்டைமானாறு சம்பத்தப்படுவதை இனி காணலாம் இது தொண்டைமானாறு பற்றி அவர் திரட்டிய வரலாற்றுக்குறிப்புகள்:

 

முதலில் தொண்டைமானாறு என்ற பெயர் எவ்வாறு வந்ததென்று பார்ப்போம் உலகப்பிரசித்திபெற்ற செல்வச்சந்நிதி கோவிலின் புராண வரலாற்றில் (கோவிலின் தெற்குப் புறமாக(?)) ஒரு நன்னீர் ஓடை இருந்திருக்கிறது என்றும், இந்நீர் ஒடையை ‘வல்லிநதி’ என்றும் சொல்லப்பட்டுள்ளது. இப்பொழுதும் தொண்டைமானாற்றின் தென்பகுதி ‘வல்லை’ என்று  அழைக்கப்படுகின்றது. வல்லி நதி பாய்ந்ததால் (வல்லி வெளி) வல்லை என்று வந்ததோ என்று எண்ண இடமுண்டு.  இவ்வல்லி நதி நீர் ஓடையை ‘தொண்டைமான்’ போக்குவரத்துக்கு ஏற்றவித்தில் அகலமாகவும் ஆழமாகவும் (ஆக்கி அத்தோடு தற்போதுள்ள புதிய வழியையும் ?) ஆக்கியதால் அப்பெயர் பெற்றது.

இத்தொண்டைமான் யார் என்று பார்த்தால் இவன் சோழ ராஜ்யத்தின் அரசன் கோ.ராஜகேசரிவர்மன் அபய குலொத்துங்க சோழனின் பிரதம மந்திரியும் சேனாதிபதியுமாவான். இவன் தொண்டைமண்டலத்தின் சிற்றரசனுமாவான். இவன் தனது பிற்காலத்தில் அபயகுலோத்துங்க சோழனின் மகன் விக்கிரம சோழனுக்கும் பிரதம மந்திரியுமாக விளங்கியவன். இவன் வட இலங்கையை வென்றது மட்டுமல்லாது கலிங்கத்தையும் (இப்போதைய ஒறிசா) வென்று செயங்கொண்டாரின் கலங்கத்துப்பரணியின் கதாநாயகனாக விளங்கியவன்.

கி.மு. 850 க்குப் பின் கடைச்சங்க காலத்தில், நற்றினை, குறுந்தொகை, அகநாநூறு, புறநாநூறு, கலித்தொகை, பதிற்றுப்பற்று, பரிபாடல், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணெண்கீழ்க்கணக்கு, திருமூருகாற்றுப்படை, சிறுபானாற்றுப்படை, பெரும்பானாற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை முதலியன தோன்றின. பட்டினப்பாலையில் நீரின் வந்த திமிர் வரிப் பரவியும்’ என்று தொடர்ந்து வரும் அடிகளில் வரும்’ ஈழத்துப்பண்டம்’ (ஈழத்து உணவு) என்று கூறப்படுவது, இங்கிருந்து சென்ற உப்பையே குறிப்பிடுவதாகக் கூறப்படுகின்றது. இவ்வுப்பு கரணவாய் வெள்ளப்பரவையில் உற்பத்தியாகி எமது ஊர் பிரதேசம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது பலருடைய துணிபுமாகும்.

கி.பி 796 தமிழ் நாட்டீலிருந்து வந்த தொண்டைமான் தனது பரிவாரங்களுடன் கீரிமலைச் சாரலில் தீர்த்தமாடிய பின் யாழ்பாண இராட்சிய அரசன் உக்கிரசிங்க மன்னன் வளவாகோன் பள்ளத்தில் பானைமிட்டுள்ளதை அறிந்து, மன்னனை சென்று பார்த்து கரவெட்டி குறிச்சியில் உள்ள கரணவாய். வெள்ளப்பரவை என்னும் இடங்களில் இயற்கையாகவே விளையும் நல் உப்பை தனது இராட்சியத்திலுள்ள பிரசைகளின் பாவிப்புக்காகத் தர வேண்டும் என்று வினயமாக வேண்டினான். இவ்விடம் கரவெட்டி என்னும் பெயர் எவ்வாறு வந்ததென்று பார்ப்போமானால், மாரி காலங்களில் கடல் பெருக்கெடுத்து ஆற்று வழியாக உட்புகும். இந்த உப்பு நீர் பயிர் விளையும் இடங்களை உவர் அடையாதிருக்க கரை கட்டுவார்கள். இப்படி கரை கட்டுவதால் ஊர்களும் பயிர் விளை நிலங்களும் காப்பற்றப்படும். (இக்கூற்று மேற்கத்தைய ஆய்வாளர் ஒருவராலும் சொல்லப்பட்டதாக எமது MP  திரு க. துரைரத்தினம் அவர்கள் சொல்லியதாக  திரு து. துரைரத்தினம் (Kutty Master) சொன்னார்).  கரைவெட்டி காப்பற்றப்பட்டதால் இவ்விடம் பின்னாளில் கரவெட்டியாயிற்று. உட் புகுந்த உவர் நீர் பள்ளமாக உள்ள கரணவாய், வெள்ளப்பரவை ஆகிய இடங்களில் கோடை காலங்களில் நீ;ர்வற்றி உப்பு விளைந்தது.      உக்கிரசிங்க அரசனும் தொண்டைமானின் கேள்விக்கு இசைந்து உப்பை எடுத்துக் கொள்ளவும் அதற்கேற்ற ஒழுங்குகளைச் செய்விக்க உத்தரவு கொடுத்தான். தொண்டைமான் மிகுந்த சந்தோஷமடைந்து, வடகடலிலிருந்து உப்பு விளையும் இடத்திற்கு மரக்கலங்கள் சென்று உப்பு ஏற்றி வரவும் மாரி காலங்களில் கடல் கொந்தளிக்கும் போது மரக்கலங்கள் ஒதுக்கிடமாக இருப்பதற்கும் ஓடையாக இருந்த வல்லி ஆற்றை ஆழமாகவும், அகலமாகவும் வெட்டுவித்தான். அக்காலம் தொடக்கம் உப்பு பிற நாடுகளுக்கு கடல் மாhக்கமாக ஏற்றுமதியாயிற்று. இவ்வாறு தொண்டைமான் வெட்டுவித்ததால் தொண்டைமானாறு ஆயிற்று. கடலுடன் சேருமிடத்திலிருந்த வல்லி ஆற்றுத்துறை ஊரும் தொண்டைமானாறு என்று கி.பி. ஏழாம் நூற்றூண்டு முதல் அழைக்கப்படுகின்றது கருணாகரத் தொண்டைமானின் பெருந்தன்மையால் இணுவில் உரும்பராய் எல்லையில் ஒரு பிள்ளையார் கோவிலும் கட்டப்பட்டு, இன்றும் இக்கோவில் கருணாகரப்பிள்ளையார் என்று அழைக்கப்பட்டு விளங்கி வருகின்றது.

(Tamil Culture Vol-4 and The Tamils in Early Ceylon)

கி.பி 1030 :         கல்கி என்ற புனைப்பெயருடன் திரு. கிருஸ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய ‘ பொன்னியின் செல்வன்’ இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சரித்திர நாவலாகும். இந்நூலுக்கு முகவுரை எழுதும்பொழுது சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி’ சூரியனுடைய வெய்யிலுக்கு விளக்கு வேண்டியதில்லை’ என்று எழுதியுள்ளார்;. பொன்னியின் செல்வன் அப்பேர்பெற்ற நூல். இதில் தொண்டைமானாற்றைப் பற்றி ஏறத்தாழ இருபது இடங்களில் குறிப்பிட்டுள்ளார் (பாகம் 2 அத்தியாயம் 40 முதல் 53 வரை) இதில் அவர் ஓரிடத்தில் எழுதியுள்ளதை அப்படியே எழுதுவதானால் ‘முந்நூறு வருஷத்துக்கு முன்னால் இலங்கை இளவரசனாகிய மானவன்மன் காஞ்சிபுரத்தில் வந்து சரண் புகுந்திருந்தான். அவனுக்கு இராஜ்யத்தை மீட்டுத் தருவதாக மாமல்ல சக்கரவர்த்தி ஒரு பெரும் படையை அனுப்பினார் அவர் அனுப்பிய படைகள் இந்தப் பிரதேசத்தில் வந்து இறங்கின. அச்சமயம் தொண்டைமான் ஆறு உள்ள இடத்தில் ஒரு சிறிய ஓடை தான் இருந்தது. கப்பல்கள் வந்து நிற்பதற்கும் படைகள் இறங்குவதற்கும் சௌகரியமாக அந்த ஓடையை வெட்டி ஆழமாகவும் பெரிதாகவும் ஆக்கினார்கள.; பிறகு அந்த ஓடை தொண்டைமானாறு என்று பெயர் பெற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.’ இராஜராஜ சோழன் (பொன்னியின் செல்வன்) வரலாற்றை (பத்தாம் பதினோராம் நுர்ற்றாண்டு சரித்திரத்தை) எழுதும் பொழுது 7ம், 8ம்நூற்றாண்டில் நடந்தவற்றை தெரிவிக்கும் வண்ணம்  மேற்குறிப்பிட்டபடி எழுதப்பட்டது என்பது தெளிவாகின்றது. இராஜராஜ சோழன் இளவயதில் அருள்மொழிவர்மனாக உலாவிய இடம் தொண்டைமானாறு. தொண்டைமானாற்றிலிருந்துதான் பின் கப்பலேறி தாயகம் சென்றதாக இந்நூல் கூறுகின்றது.

கி.பி . 1590 முதல்இலங்கையின் பல பகுதியிலும் பறங்கியர் வியாபாரத்தொடர்புகள் வைத்திருந்தாலும் கி. பி. 1619 முதல் கி;.பி. 1658 வரை யாழ்ப்பாணத்தை முழுமையாக கைப்பற்றி ஆட்சி நடத்தியுள்ளார்கள். அப்பொழுது தொண்டைமானாற்றின் ஊடாக  உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகின்றது.

கி.பி. 1658 முதல் கி.பி. 1796 வரையிலும் ஒல்லாந்தர் காலத்திலும் இவ்வுப்பு தொண்டைமானாற்றின் ஊடாக ஏற்றுமதி செய்யப்பட்டது மட்டுமல்லாது பச்சிலைப்பள்ளி தென்மராட்சியில் வெட்டுவித்த பனைமரங்கள் சலாகைகளும் தொண்டைமானாற்றின் கரை ஊடாக சென்றதை சரித்திரம் கூறுகின்றது. 1677 ம் ஆண்டுக் கணக்கின்படி 50,687 கைமரங்களும் 26,040 சலாகைகளும் ஏற்றப்பட்டன. (ஆதாரம் யாழ்ப்பாணம் வைபவ கௌமுதி) இம்மரங்கள் நாகபட்டினம், கொழும்பு முதலிய இடங்களுக்கும் சென்றன.

கி.பி. 1796 முதல் ஒல்லாந்தரிடமிருந்து பிரத்தானியர்ஃஆங்கிலேயர் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டார்கள். இப்பொழுதும் தொண்டைமானாற்றின் ஊடாக உப்பு ஏற்றுமதியாயிற்று. ஆங்கிலேயர் காலத்தில் கி.பி. 1829 முதல் 1867 வரையிலும் டைக்துரை அவர்கள் யாழ்ப்பாண அரச அதிபராக வந்து பொதுசனங்களுக்கு செய்த நன்மைகளோ அளப்பரியது. எடுத்துக்காட்டாக ஏழைகளுக்கும் ஏதிலிகளுக்கும் சகாயமும் மற்றும் வேண்டிய உதவிகளும் இலவசமாகப் பெறும் பொருட்டு  ‘ஆபத்துக்குதவி வைத்தியசாலை’ என்னும் பெயருடன் ஒரு வைத்தியசாலையை ஆரம்பித்ததுடன் வருடந்தோறும் தமது உழைப்பில் விசேஷ ஒரு பாகத்தையும் கொடுத்து  சிறப்பாய் நடாத்தியுள்ளார். இவ் வைத்தியசாலையே இன்று யாழ்ப்பாணப் பெரிய ஆஸ்பத்திரியாக விளங்குகின்றது. 1829 முதல் 1878 க்கு இடையில் இவரின் உத்தரவின் பெயரில் தொண்டைமானாற்றின் மேல் வல்லையில் ஒரு பாலமும் தொண்டைமானாற்றில் ஒரு பனைமரப்பாலமும் கட்டப்பட்டது. இதில் செல்வோர் ஓர் ஆயப்பணம் (Toll)   செலுத்தினார்கள். 1910 ல் இது நீக்கப்பட்டது. இப்பாலம் கட்டும் வரையில் கரணவாய், வெள்ளப்பரவை உப்பானது. தோணி, வள்ளங்களிலேயே கொண்டு வரப்பட்டு உப்புமாலில் சேமிக்கப்பட்டு ஏற்றுமதியாயிற்று. பின் தொண்டைமானாறு செட்டிய ஊர் வழியாக ஒரு வீதியும் அமைக்கப்பட்;டது. இதை இன்றும் உப்பு றோட்டு என்று அழைக்கின்றார்கள். இப்பாதை அமைக்கப்பட்டபின் மாட்டு வண்டி ஊடாக உப்பு தொண்டைமானாற்று உப்பு மாலை வந்தடைந்தது.      தொண்டைமானாற்றிலிருந்து உப்பை ஏற்ற வரும் கப்பல்கள் சில பொருட்களையும் கொண்டு வந்து இறக்குவதுண்டு. வெறுமனே வரும் கப்பல் சீரான ஓட்டத்திற்காக சுண்ணாம்புக் கற்களையும் கருங்கற்களையும் ‘ஞானப்பாரமாக’ ஏற்றி வருவதுண்டு. இவ்வாறு கொண்டு வரப்பட்ட கருங்கற்கள் கரையில் கொண்டுவந்து கொட்டிவிடுவார்கள். இவை இன்றும் உப்புமால் கரையில் கிடப்பதைக் காணலாம். கப்பல்களில் வருவோருக்கு தமிழ் தெரியாவிட்டால் தொண்டைமானாற்றில் முதன் முதலாக ஆங்கிலம் படித்த சிதம்பரப்பிள்ளைச் சட்டம்பியாரை அழைத்துப்போய் பேசுவார்களாம். இவர் பிற்காலத்தில் சமயம் மாறி கிறிஸ்தவராகி மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையில் படித்து வைத்தியராக விளங்கியது குறிப்பிடத்தக்கது. தமிழ் தெரியாத பிற நாட்டவர்களும் கப்பலில் உப்பு ஏற்ற வந்துள்ளார்கள் என்பது இதனால் தெரிகின்றது. மோட்டார் வாகனங்கள் வந்த பின் லொறிகளில் உப்பு கரணவாய் உப்பளத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. இதை ஏற்று நடத்தியவர் பொன்னுச்சாமி. நாராயணசாமி ஒப்பந்தக்காரராவார்.

1948 ல்  தொண்டைமானாற்று கடலேரியை நன் நீராக்கும் நோக்குடன் ஆற்றுக்கு குறுக்கே ஓர் அணை கட்டப்பட்டது இதைத்தொடர்ந்து 1949 ம் ஆண்டு கரணவாய் உப்பளமும் தொண்டைமானாற்றின் உப்புமாலும் மூடப்பட்டது. உப்புமாலில் எவ்வாறு உப்பு சேமிக்கப்பட்டது என்றால் நிலத்தை சுமார் ஓர் அடி உயர்த்தி அதன் மேல் பனையோலையால் செய்த பாய் விரிக்கப்பட்டு சுமார் 100 அடி நீளமும் 20 அடி உயரமாக முக்கோணமாக குவிக்கப்பட்டு பனை ஓலையால் வேயப்பட்டு மூடி இருப்பார்கள் இப்படிப் பல பல குவியல்கள் வரிசையாக இருக்கும். ஏற்றுமதியின் பொழுது ஓலை பிரிக்கப்பட்டு தென்னம் தும்பினால் செய்த கயிற்றுச் சாக்குகளில் நிரப்பப்பட்டு அனுப்பப்படும். அரசாங்கம் கப்பல் சேவையை தனதாக்கியதால் கப்பல்கள் வருவதில்லை. உப்பு புகையிரதம் மூலமாகவே காங்கேசன் துறையில் இருந்து அனுப்பப்பட்டது.      இவ்வாறு கி.மு. 850கடைச்சங்க காலத்தில் தொடங்கிய உப்பு உற்பத்தியும் பலப் பல தடைகளைத் தாண்டி வந்து 1949 ம் ஆண்டு மூடப்பட்டது. இன்றும் தொண்டைமானாற்றின்  மேற்குக்கரை உப்புமால் என்று அழைக்கப்படுகின்றது.

உப்புமாலின் இன்றைய நிலை மிகவும் சோகமானதொன்றாகும். அது ஒரு இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

 

ஆக்கம்

இ.சிறீதரன்

பி.கு: ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒரு பிரதேசம், அதுவும் பிறதேசத்தவர் வந்துபோன, பல படையெடுப்புகளைக்னண்ட பிரதேசம் ஒரு சிறிய மேகத்தால் மறைக்கப்படக்கூடுமோ?.

 

 

 

 

 

 

 

 

 

About The Author

Number of Entries : 11

Leave a Comment

You must be logged in to post a comment.

© 2013 Thondaimanaru.com